பிரதமராக பதவியேற்றது ஏன்..! ரணில் விளக்கம்
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“தேசத்தைக் காப்பாற்றவும், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும். அதே வேளையில் இந்த நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இதனை என்னால் தனியாக செய்ய முடியாது, எனவே எனக்கு சர்வதேச உதவி தேவை” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"தேசத்தைக் காப்பாற்ற நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் நான் உத்தேசித்துள்ளேன்," என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 9ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இதனையடுத்து முழு அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இன்று ஆறாவது தடவையாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 2021 ஜூன் 23ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்து, பத்தரை மாதங்களில் ரணில் பிரதமராகியுள்ளார்.