சீனாவின் ஏற்றுமதித் தடையால் ஆசியாவில் பொருளாதார நெருக்கடி: உதவி கோரி நிற்கும் நாடுகள்
ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி மற்றும் உரத் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், சீனா விதித்துள்ள இரகசிய ஏற்றுமதித் தடைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளன.
உர ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாகவும், எரிபொருள் விநியோகத்தில் முக்கிய சக்தியாகவும் விளங்கும் சீனா, தனது சொந்தப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.
இதனால் வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சீனாவுடன் மோதல்
பிராந்திய ஒத்துழைப்பு குறித்துப் பெரிய வாக்குறுதிகளை அளித்துவந்த சீனா, தற்போது நிலவும் தட்டுப்பாடு குறித்தோ அல்லது ஏற்றுமதித் தடைகள் குறித்தோ அதிகாரப்பூர்வமாக வாய் திறக்காமல் மௌனம் காப்பது அண்டை நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்கப் பல்வேறு நாடுகள் சீனாவிடம் தூதரக ரீதியாக உதவி கோரி வருகின்றன. ஏற்கனவே கையெழுத்தான எரிபொருள் ஒப்பந்தங்களை மதிக்குமாறு பங்களாதேஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மலேசியாவில் உரத் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமான பாமாயில் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் கூட, தனது நாட்டு விவசாயத்தைக் காக்கச் சீனாவிடம் உர உதவி கேட்டுத் தூதரகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
எரிசக்தித் தேவை
அவுஸ்திரேலியா தனது விமான எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியைச் சீனாவையே நம்பியிருப்பதால், அது குறித்தும் பெய்ஜிங்குடன் ஆலோசித்து வருகிறது.
இருப்பினும், சீனா தனது கையிருப்பில் உள்ள உணவு அல்லது எரிசக்தி வளங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவு என்றே சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்தே சீனா மேற்கொண்டு வரும் உணவு மற்றும் எரிசக்தி சேமிப்புக் கொள்கை, தற்போது நிலவும் போர்ச் சூழலில் அவர்களுக்கு ஒரு தற்காப்பு அரணாக அமைந்துள்ளது.
"சீனா அடையாளத்திற்காகச் சில உதவிகளை வழங்கலாமே தவிர, தனது சொந்த வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் பெரிய அளவில் எதனையும் செய்யாது" எனச் சீனா-குளோபல் சவுத் திட்டத்தின் இணை நிறுவனர் எரிக் ஓலண்டர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆசிய நாடுகள் தங்களின் எரிசக்தித் தேவைகளுக்கு மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.