கொழும்பில் இன்று பாரிய கறுப்புப் பேரணி
ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய கறுப்பு உடைப் பேரணியொன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோ கம” போராட்டத்துக்கு இன்றுடன் 50 நாட்கள் பூர்த்தியாகின்றது. அதனை முன்னிட்டு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் பேரணி, ஜனாதிபதி செயலகம் வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வருகை தரும் அனைவரும் கறுப்பு உடை அணிந்து வருமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்தும் இந்தப் பேரணி மற்றும் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் தங்களால் முடிந்த வழிகளில் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.