ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு
இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தொடர்பாக தயாரிக்கப்பட்ட 36 பக்க அறிக்கை இன்று மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அந்த அறிக்கையில் இந்த மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முதன்முறையாக பொருளாதார குற்றச்சாட்டு
மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஒரு நாட்டின் முன்னாள் தலைவர்கள் மீது பொருளாதார குற்றங்கள் சுமத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை மக்கள் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது, இந்த மூவரும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நாட்டில் அராஜகச் சூழல் ஏற்பட்டு விலைவாசி உயர்வடைந்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணையாளரிடம் பெருமளவான இலங்கையர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், பிரான்சில் இருந்து ஐஸ்கிரீம் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து கேக்குகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.