எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் இலங்கையில் கடுமையாக நடைமுறைக்கு வரும் திட்டம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வாகனங்களில் ஆசனப்பட்டி
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விதி ஓராண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சில பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஆசனப்பட்டி பொருத்தப்படாததால், நடைமுறை காரணங்களால் அதன் அமலாக்கம் தாமதமானது.
ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், செப்டெம்பர் 19 முதல் இந்த விதியைக் கடுமையாக நடைமுறைப்படுத்த நாங்கள் இப்போது முடிவு செய்துள்ளோம். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாடசாலை வான்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.

சாலைத் தகுதிச் சோதனை
அத்துடன் பேருந்துகள் மற்றும் வான்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்களும், இந்த ஆண்டின் இறுதி முதல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை அல்லது 5000 கிலோமீட்டர் பயணித்த பிறகு சாலைத் தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நல்ல ஓட்டும் நிலையில் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். பிரேக் மற்றும் டயர் பிரச்சினைகள் உட்பட வான்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளால் சில பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதை நாங்கள் கவனித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23