தமிழ் கூறும் நல் உலகிற்கு பிரித்தானிய மண்ணில் கிடைத்த ஓர் அங்கீகாரம் (Video)
உலகளாவிய ரீதியில் இணையவழி ஊடாக தமிழ்மொழி மற்றும் கலைகளை கற்பிக்கும் வகையில் ஐபிசி தமிழ்க்குழுமத்தின் புதிய அங்கமாக உச்சி இணையத்தளம் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்திருநாள் தினத்தில் லண்டனில் உள்ள ஐ.பி.சி. தமிழின் தலைமைப்பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உச்சி இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பான ஊடக சந்திப்பும் உரையாடலும் நடத்தப்பட்டுள்ளது ஐபிசி குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஐ.பி.சி குழுமத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிராஜ்டேவிட் மற்றும் ஊச்சி இணையத்தளத்தின் பணிப்பாளர் மதுரன் தமிழவேள் ஆகியோர் பங்கெடுத்து ஊடகசந்திப்பையும் உரையாடலையும் முன்னெடுத்திருந்தனர்.
ஐபிசி குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தனது கருத்துரையில்;-
புலம்பெயர் நாடுகளின் வாழும் எதிர்கால சந்தியின் தமிழ்மொழி பயன்பாடு அருகிவிடும் ஆபத்து இருப்பதால் அதனைத்தடுக்கவேண்டிய பெரும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கின்றது என்று தெரிவித்தார்.
அதனால் தமிழ் மொழியை அடுத்த சந்ததியினருக்கு கொண்டுசெல்லும் இது போன்ற செயற்திட்டங்கள், குறிப்பாக தொழில்நுட்பத்துடன் கூடிய அணுகுமுறைகள் அவசியம் என்று தெரிவித்தார்.
அப்படி நாம் செய்யத்தயங்குகின்ற சந்தர்ப்பத்தில் மொறிசியல் போன்று பெயர் அடையாளத்தில் மாத்திரம் தமிழ் எச்சமாக இருக்கின்ற ஒரு இனமாக நாம் மாறிவிடும் அபாயத்தையும் சுட்டிக்காண்பித்தார்.
உலகின் எப்பாகத்தில் இருந்தும் இணையத்தினூடே அடிப்படைத் தமிழ் தொடக்கம் யாப்பிலணக்கம் வரை நீங்கள் கற்க முடியும்.
மேலும் எழுத்து ஒலிப்புமுறை, அடிப்படை கணனி அறிவியல், பரதநாட்டியம் என வேறுபல பாடநெறிகளும் இங்கு உண்டு.
‘மெட்டுக்குப் பாட்டெழுதுவது எப்படி..?’ என்றோர் பாடநெறியும் உண்டு. பாடலாசிரியர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இப்பாடநெறி அமையும் என்பதில் ஐயமில்லை.
கற்கைநெறியின் முடிவில் உச்சி இணையத்தளம் சார்பில் தேர்ச்சி சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
புலம்பெயர் பெற்றோர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமது பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பிப்பதிலும் தமிழுடன் தொடர்புடைய கலைகளைப் போதிப்பதிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இதற்கு ஒரு சிறந்த வழியாக உச்சி இணையத்தளம் இருக்கிறது. இந்த நல்ல முயற்சிக்குயின் முழுமையான விபரங்களைத் தெரிந்துகொள்ள உச்சி இணையத்துக்குச் செல்லுங்கள்.
இந்த நிகழ்வில் நேரடியாகவும் zoom தொழினுட்பத்தின் ஊடாகவும் ஆர்வலர்களும் ஊடகர்களும் பங்கெடுத்திருந்தனர்.