மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள்! எழுந்துள்ள குற்றச்சாட்டு
எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம்,வளங்கள் இழக்கப்படுகின்றன.
கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை மேற்கொண்டு நடத்த முடியாத சூழல் ஏற்படுகின்றது என கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.
காணி மீட்பு
கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையப்பினை ஊடாக சந்திப்பு இன்று மையலம்பாவெளியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்போதுமேலும் கருத்து தெரிவித்த தலைவர், கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையப்பின் ஊடாக இந்த வாரத்தினை காணி மீட்புக்கான வாரமாகப் பிரகடணப்படுத்தியுள்ளோம்.
கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் மக்களின் காணி உரிமங்கள் பெறப்படாமலும், அவர்களின் இருப்பிடங்கள் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. அந்த அடிப்படையில் அவர்களின் காணிகளை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
உள்ளுர் அரச அதிகாரிகள் திணைக்களங்கள் ஊடாகவும், சர்வதேச மட்டத்திலும் இது தொடர்பான பரிந்துரைகள் அறிக்கைகள் போன்றவற்றினை வெளியிட்டு வருகின்றோம். பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் மக்களின் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதில் பல தடைகளும் இருந்து வருகின்றது. சில காணிகள் சட்டத்திற்குட்பட்டதாக அபகரிக்கப்பட்டு வருகின்றன.
முழுமையாக அரசாங்கம்
சில மகாவலி அபிவிருத்தி, அபிவிருத்திச் செயற்பாடுகள் என்ற போர்வையில், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள், வன இலாகா, சுற்றுலா, பூஜா பூமி என்ற பௌத்த ஆலயங்கள் நிர்மானிப்பு போன்ற விடயங்களை முன்நிறுத்தி இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காணி அபகரிப்புகளுக்குப் பின்னால் முழுமையாக அரசாங்கம் இருக்கின்றது.
தங்களை நல்லாட்சியான, இனவாதமற்ற ஆட்சியாளர்கள் என்று கூறிக் கொள்ளும் இந்த அரச தரப்பினர் தயவு செய்து வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மேற்கூறப்பட்ட திணைக்களங்களின் ஊடாக அபகரிப்பதை நிறுத்த வேண்டும். எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இதனால் மக்களின் வாழ்வாதாரம். வளங்கள் இழக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை மேற்கொண்டு நடத்த முடியாத சூழல் ஏற்படுகின்றது. தனது இருப்பிடத்தை இழந்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் பாகமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். கடந்த கால அரசாங்கங்கள் போலவே இந்த அரசாங்கமும் மேற்கொள்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது.
மக்களின் காணிகள்
எதிர்க்கட்சியில் இருக்கும் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் காணிகள் மீட்டு வழங்கப்படும் என்ற செய்தியைச் சொல்லியே வந்தார்கள்.
யுத்தகாலத்தில் கூட பாதுகாக்கப்பட்ட பூமிகள் இன்று யுத்தம் நிறைவடைந்திருந்தும் வெளிப்படையாகவே அதிகாரத்தின் உச்சத்தைப் பயன்படுத்தி அபகரிக்கப்படுபகின்றன. 03 வருட காலத்திற்கு மேலாக மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் மேய்ச்சற்தரைக்காகப் போராடுகின்றார்கள்.
அதே போலவே அனைத்து இடங்களிலும், சட்டபூர்வமாக நீதிமன்ற கட்டளைகள் இருந்தும் அவற்றையும் கூட மதிக்காமல் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக சில கட்டுமானப் பணிகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு எமது மக்களுக்கான காணிகள் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு எமது மக்களுக்கான காணிகள் கிடைக்கும் வரை எமது மக்களுக்குத் துணையாக நிற்போம் என்பதையும் தெரிவிக்கின்றோம்.
கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தட்சணாமூர்த்தி நவஜோதி, இன்றிலிருந்து கிழக்கு மாகாண காணி வலையமைப்பின் ஊடாக காணி வாரத்தினை அமுல்படுத்தியுள்ளோம். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை திணைக்கள் என்ற போர்வையில் அதிக காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
வேலைத்திட்டங்கள்
இதன் மூலமாக எமது வாழ்வாதாரம், கலாச்சாரம் வாழ்வியல், அடையாளங்கள் அனைத்திலும் திட்டமிட்ட அழிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய விடயங்களை முன்நிறுத்தியே இந்த காணி வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஊடாக நாங்கள் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளோம்.
நில உரிமை காணி சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அரச சேவை வழங்குனர்கள், சிவில் சமூகங்களுக்கிடையில் காணிப்பிணக்கு தொடர்பான உரையாடல்களை ஏற்படுத்தல், சமூகங்களுக்கு அரசே சேவைகள் மற்றும் காணி ஆவணங்களைப் பேண உதவுதல், வெளிநாட்டு இராஜதந்திரிகளின் பரிந்துரை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல், பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களைப் பதிவு செய்து அரச கொள்கை மட்டத்திற்குக் கொண்டு செல்லல் போன்ற வேலைத்திட்டங்களை இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் நாம் மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்கான அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம்.


பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri