மாந்தை கிழக்கு பிரதேச சபையில் பதற்றம் - தவிசாளர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
மன்னார் - மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வானது நேற்றையதினம்(25.06.2026) சபையின் தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உப தவிசாளர் சத்தியமூர்த்தி சத்தியவரதனினால் தவிசாளருக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டு பெரும் விவாதமாக மாறியுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை
பிரதேச சபை உறுப்பினர்கள் யாருக்கும் அறிவித்தல் வழங்காது, பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படாது பிரதேச சபையின் சொத்துக்களை ஏலம் விட்டமை தவறு, வடமாகாண மென்பந்து போட்டி பாலிநகரில் நடைபெற்ற போது தண்ணீர் வழங்குவதற்கு இடையூறாக இருந்தார், மாற்று வழியாக துணுக்காய் பிரதேச சபையிலிருந்து தண்ணீரை கொண்டு வரும்போது தவிசாளர் தண்ணீரை கொண்டு செல்ல விடாது வழிமறித்தார், வாகனங்களுக்கு எரிபொருள் வீண்விரயம் செய்தமை, போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
இதன்போது, தவிசாளர் பிரேரணையை எதிர்ப்பதாகவும் அது உள்ளூராட்சி சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்புடைய பிரேரணை இல்லை என்றும் அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உப தவிசாளர் இதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் தனக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்த போது அதனை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டுள்ளது.
உபதவிசாளருக்கு எதிராக வரும்போது சட்டத்தில் இடமுள்ளது.
தவிசாளருக்கு எதிராக வரும்போது சட்டத்தில் இடமில்லை என்றால் எந்த வகையில் அது நியாயம் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தவிசாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போது சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கான அனுமதி மறுப்பு
அத்துடன், ஊடகவியலாளர்களை சபையின் நன்மதிப்பை பாதுகாக்கும் வகையில் காணொளிகளை பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறும், ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்படுகின்றது எனவும் தவிசாளரால் கூறப்பட்டுள்ளது.
அமர்வின் போது உறுப்பினர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கரும்புள்ளியான் நாகதம்பிரான் ஆலய அன்னதானத்திற்காக கட்டணம் செலுத்தப்பட்டு பற்றுச்சீட்டு பெற்றிருந்த போதிலும் தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட உறுப்பினரை பழிவாங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், உப தவிசாளர் கொண்டு வந்த பிரேரணை அடுத்த அமர்வில் விவாதிக்கப்பட வேண்டும் என சில உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
8 வட்டாரங்களிலும் மக்கள் தவிசாளரிடம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி முறையிடுகின்ற நிலையில், அடிப்படை தேவைகளுக்குக் கூட தீர்வு காணப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடை தொகுதி
தவிசாளர், பாண்டியன்குளம் வட்டாரத்திற்குள் கடை தொகுதி ஒன்று வருவதாகவும் அதனை செய்து கொண்டு கரும்புள்ளியான் மக்களின் தேவைக்காக அந்தக் கடைதொகுதியை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாது, இது பாண்டியன்குளப் பகுதியிலே அமையப்பெறுகிறது, அதனை மறுப்பதாக கரும்புள்ளியான் வட்டார உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எட்டு மாதமாக மின்குமிழ்கள் பொருந்துமாறு உறுப்பினரால் கூறப்பட்டும் பொருத்தப்படவில்லை எனவும் , மின்குமிழ்கள் பொருத்தும் பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் ஏற்கனவே பொருத்தப்பட்ட பகுதிகளிலேயே மீண்டும் பொருத்தப்பட்டு வருவதாகவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மொத்தத்தில், சபை அமர்வு முழுவதும் பெரும்பாலான உறுப்பினர்கள் தவிசாளரின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த நிலையில், கூட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.