மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
உயர் நீதிமன்றத்தினால் மீண்டும் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உள்ளிட்டவர்களுக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி உச்ச நீதிமன்றின் முழுமையான நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மீளவும் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நட்டஈடு செலுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய மேலும் 85 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.