உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும் : சுந்தரலிங்கம் பிரதீப்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
கல்லடி - வேலூரில் பகுதியில் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று(28.04.2026) கலந்து கொண்டு உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
நீதி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தகங்களை எழுதி குற்றங்களை மறைத்துக் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலே இதற்கான விசாரணைகள் சரியான முறையிலே, நீதியான முறையிலே கொண்டு செல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், நீதியை எதிர்பார்ப்பவர்களுக்கும் மிக விரைவிலே அந்த நீதி தேவதை தன்னுடைய தீர்ப்பைச் சரியான முறையிலே வழங்கும் என்பதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோன்று, ஆட்சியில் இருந்த போது பல குற்றங்களை செய்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கும், அவர்கள் செய்த குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் நிச்சயம் தண்டணை கிடைக்கும் என கூற விரும்புகிறேன்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதிலிருந்து, பல முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கைது வரை நாட்டிலே நீதி தேவதையினுடைய செயல்பாடுகள் சரியான முறையில் நடைபெறுவதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கின்றோம் என்றார்.