தனக்குத் தெரியாமலேயே அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட சஹ்ரானின் தொலைபேசி! மைத்திரியின் சர்ச்சைக்குரிய தகவல்
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அவை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி முதல் தாக்குதல்கள் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் திகதி வரை தொடர்ச்சியாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததாகவும், எனினும் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அவை தொடர்பில் தனக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள்
ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல்களை வழங்கியிருந்ததாகவும், ஆனால் அவை ஜனாதிபதியான தனது கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தமக்கு எந்தத் தகவலையும் வழங்கவில்லை எனவும், இன்றுவரை அது தொடர்பான கேள்வி தனக்கு இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களைத் தடுப்பதற்காக பொலிஸார் ஜனாதிபதி அல்லது பிரதமரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குப் பொறுப்பான பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிலும் தனித்தனியான புலனாய்வுப் பிரிவுகள் செயற்பட்டதாகவும், ஸஹ்ரான் ஹாஷிம் பயிற்சி முகாம்களை நடத்தி வந்தமை தொடர்பான தகவல்களும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுணதீவு பொலிஸார் கொலைச் சம்பவம்
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் மைத்திரிபால சிறிசேன தனது நேர்காணலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு இராணுவத்திற்குப் பணிப்புரை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு வாரத்தின் பின்னர் இராணுவ அதிகாரி ஒருவர் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, விசாரணையில் முக்கியமான தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்ததாகவும், பின்னர் தனது வீட்டிற்கு நேரில் வந்து அந்தத் தகவலை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பினரே கொலை செய்ததாக குறித்த அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் கிழக்கில் ஸஹ்ரானின் குழுவினருடன் பாதுகாப்புப் படையினர் மோதலில் ஈடுபட்டு வீடுகளைச் சோதனையிட்டபோது, கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சொந்தமான கைத்துப்பாக்கிகள் ஸஹ்ரானின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாகத் தான் அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், வவுணதீவு சம்பவம் தொடர்பில் தனக்கு முன்னர் வழங்கப்பட்ட தகவல்கள் குறித்து கேள்விகள் எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்தேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற தினம் தான் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியதாகவும், தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை அங்கிருந்தபோதே அறிந்துகொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பில் தனக்குத் தெரியும் என ஓர் அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாகவும், அது தொடர்பில் அவரிடம் விளக்கம் கேட்டபோது, பிரித்தானியப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டே அவ்வாறு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ தாக்குதல் தொடர்பில் தனக்கு முன்னரே தகவல் வழங்கியிருந்தார்களா என்பதை அந்த அமைச்சர் தன்னிடம் நேரடியாகக் கேட்டிருக்கலாம் எனவும், ஆனால் அவ்வாறு யாரும் தன்னிடம் விசாரிக்கவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மறுநாளிலிருந்து ஏழு அல்லது எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகள் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கைகள் தற்போது எங்கே உள்ளன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சஹ்ரானின் கையடக்கத் தொலைபேசியிலிருந்த மதர்போர்டு (Motherboard) தனது அனுமதியின்றி அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்குத் தெரிந்த தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கியுள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் செயற்பட்ட அந்தத் தாக்குதல் குழுவினர் தனியாகச் செயற்படவில்லை என்றும், அவர்களுக்குப் பின்னால் வெளிநாட்டுத் தொடர்புகள் இருந்ததாகத் தான் நம்புவதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.