உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: தப்புலவை விசாரணைக்கு அழைக்க இடைக்காலத் தடை!
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை விசாரிப்பதையும், அவரைக் கைது செய்வதையும் தடுக்கும் வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்றைய தினம் (24.04.2023) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தினமும், விசாரணைக்கு முன்னிலையாகாவிட்டால், அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்திருந்தது.
தப்புல டி லிவேரா மனுத் தாக்கல்
இந்தநிலையில், இன்றைய தினம் சட்டத்தரணியின் ஊடாக, தன்னை விசாரணைக்கு அழைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, வாக்குமூலம் பெறுவதற்காக, கடந்த 19 ஆம் திகதி, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்குப் பதிலாக அவரது சட்டத்தரணி ஒருவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவு விடுத்த அழைப்பு தொடர்பில் அவர் 7 பக்க சட்ட ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்
2021ஆம் ஆண்டு சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் கருத்து வெளியிட்டிருந்த தப்புல டி லிவேரா, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில், பாரிய சதித்திட்டம் இடம்பெற்றிருந்தது என்றும், அது தொடர்பில் அனைவரும் சாட்சிகள் ஊடாகக் கண்டறிய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அவருடைய கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள
வேண்டும் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பல்வேறு சந்தர்ப்பங்களில்
வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.