உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி செய்வதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சதி
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான முக்கிய தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சி முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததன் மூலம் அரசாங்கம் அதற்கான வாய்ப்பை சதி செய்து தடுத்துள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பரிந்துரைகளை மீறி சபாநாயகர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்துள்ளார்.
இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற பலம் இருக்கும் நிலையில் பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவாக வெற்றி கொண்டிருக்கலாம்.
ஆனாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் வகையிலேயே அதனை நிராகரித்து அரசாங்கம் சதி செய்துள்ளது.
எனினும் எதிர்வரும் நாட்களில் எந்த வழியிலாவது குறித்த தகவல்களை நாட்டு மக்களுக்கு முன்வைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.



