சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் தென்னிந்தியாவில்! அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்யும் நிலைப்பாடு
என்னையும் படுகொலை செய்யும் நிலைப்பாட்டில் தான் பயங்கரவாதி சஹ்ரான் இருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் தென்னிந்தியாவில் உள்ளார்கள் என்றும் சம்பிக்க இதன்போது கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்கையில் பல விடயங்களை நான் குறிப்பிட்டேன். ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கையில் நான் வழங்கிய சாட்சியங்கள் உள்ளடக்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவம் தொடர்பில் அன்ஷிப் ஆசாத் மௌலானா என்பவர் சனல் 4 தொலைக்காட்சிக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு சாட்சியம் வழங்கியுள்ள பின்னணியில் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியமளித்த குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
புலனாய்வு தகவல்கள், விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.
பயங்கரவாதி சஹ்ரான் தவறான மத மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு மத வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதனை பாதுகாப்பு தரப்பினர் பொருட்படுத்தவில்லை. இதன் விளைவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்.
சஹ்ரானுக்கும், புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்புக்கு இடையில் தொடர்பிருந்தது என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பாதுகாப்பு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதை மறுக்க முடியாது.
புலனாய்வு பிரிவின் விசாரணைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, புலனாய்வு பிரிவின் விசாரணைகளை திசைத்திருப்பி விட்டமை, கிடைக்கப் பெற்ற தகவல்களை உரிய தரப்புக்கு பரிமாறாமல் இருந்திருந்தமை உள்ளிட்ட பல விடயங்களை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.
பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடைய தரப்பினர் தென்னிந்தியாவில் உள்ளார்கள். கடந்த ஆண்டு தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் சஹ்ரான் தரப்புடன் தொடர்புடையவர்கள் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டார்கள். ஆகவே பிரச்சினை இன்றும் முடிவடையவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் அடிப்படைவாத கொள்கையுடைய பல அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்தது. ஆனால் அண்மையில் ஒரு சில அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புக்களை அலட்சியப்படுத்த கூடாது.
அரசியல் வேறு தேசிய பாதுகாப்பு வேறு என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்குள் அரசு தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
யாரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும், எந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அரசுக்குள் அரசாக செயற்படும் தரப்பினர் தீர்மானிக்கிறார்கள்.
மோசடியான தரப்பினர் முன்னிலையில் இருக்கும் வரை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு தீர்வு கிடைக்காது. எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் ஊடாக நாட்டு மக்கள் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |