அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அதிகாரி
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விசாரணை அதிகாரியாக கடமையாற்றிய பிரதான விசாரணை அதிகாரி நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தெரியவந்துள்ளது என அருண என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு வழங்கப்பட்ட அந்த அதிகாரி அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு சபைக்கு புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை வழங்கியுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜஸ்மின், மன்னாரில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக இந்த அதிகாரியே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்கி இருந்தார்.
சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய சாரா ஜஸ்மின் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதை தனது இரண்டு உளவாளிகள் நேரில் பார்த்ததாக கூறி, அவர்களின் சாட்சியங்களை இந்த அதிகாரி ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருந்தார்.
சாரா ஜஸ்மினை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அழைத்துச் சென்றதாக இந்த அதிகாரியே ஆணைக்குழுவில் குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் அபுபக்கர் என்ற பொலிஸ் பரிசோதகர் அதிகாரியால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் அபுபக்கர் என்ற அதிகாரியை பொய் சாட்சியை ஜோடித்து சிறையில் அடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் பதவி உயர்வுக்காக இந்த அதிகாரி, நிரபராதியான அதிகாரிக்கு எதிராக பொய் சாட்சியை ஜோடித்து சிறையில் அடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேரில் பார்த்தவர்கள் என்று கூறிய உளவாளிகள் இருவரும் சம்பவம் நடந்த காலத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு மேலாக வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்துள்ளதாக அவர்களின் செல்போன்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன் ஆணைக்குழுவின் அதிகாரியின் தேவைக்கு அமைய தாம் பொய் சாட்சியை கூறியதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி ஆணைக்சுகுழுவின் விசாரணை அதிகாரியின் தேவைக்கு அமைய அபுபக்கர் என்ற அதிகாரி நிரபராதியாக சிறையில் இருப்பதாக சட்டமா அதிபருக்கு அறிக்கை வழங்கியுள்ள பொலிஸ் திணைக்களம் அவரை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி, பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிக்காது நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.



