ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(24.2.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுக்க நடவடிக்கை
தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள், பிரதான சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதலுடன் நேரடித் தொடர்பு உடையவர்கள் ஆகியோர் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்தல், சாட்சியங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சில நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களம் விசேட கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விரைவில் நீதி
எனினும் எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னதாக குற்றவாளிகளை அம்பலப்படுத்த முடியுமா என தெரியவில்லை எனவும் விரைவில் நீதி நிலைநாட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு பொறுப்பானர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே எமது இலக்கு எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக அதற்கான பினன்ணி உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.