உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter attack) தொடர்பில் இதுவரை 93 பிரதிவாதிகளுக்கு எதிராக 43 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வழக்குகள் கொழும்பு(Colombo), கம்பஹா(Gampaha) மற்றும் பாணந்துறை(Panadura) ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள்
மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், கொழும்பு மேல் நீதிமன்றில் (Colombo High Court) பிரதான வழக்கு விசாரணைக்கு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் இதுவரை 78 பேர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைத்த நிலையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் இரண்டு குழுக்கள் நடத்திய விசாரணையில், அவருக்கு எதிரான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், பொலிஸ் ஆணைக்குழு, நிலந்த ஜெயவர்த்தனவுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்துள்ளதுடன், ஜயவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றில் சவால் விடுத்துள்ளார்.
மேலும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒழுக்காற்று விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |