சனல் 4 காணொளி விவகாரம்: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவியதாக பிள்ளையான் குற்றச்சாட்டு
மனித உரிமை பேரவையின் அமர்வுக்கு முன்னதாக சனல் 4 நாடகங்கள் போன்றவை இடம்பெறுவது வழமை என நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலககெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து சனல் 4 இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு ஆதரவளித்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கேள்வி : உங்கள் கட்சியின் பேச்சாளராக பணியாற்றிய அசாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் - உங்கள் பதில் என்ன?
பிள்ளையானின் பதில் : அசாத் மௌலானா எங்களுடன் இருந்தார். நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக பணியாற்றிய வேளை அவர் எங்களுடன் பணியாற்றினார். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அவர் சில தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டார். இதனையும் ஏனைய கஷ்டங்களையும் சுட்டிக்காட்டிய அவர் வெளியேற விரும்பினார்.
அவர் தற்போது நாட்டில் இல்லை. ஒரே இரவில் செல்வந்தராவதற்காக என்ன செய்ய முடியும். இவ்வாறான போலியான பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிடுவதே அதற்கான ஒரே வழி. எங்களை போல அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை. அவர் எங்களின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலேயே இணைந்தார்.
அவரால் விடுதலைப் புலிகள் குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது. இதன் காரணமாக அவர் சர்ச்சைக்குரிய விடயமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசியுள்ளார். தற்போது அவர் நாடகமாடுகின்றார், நடிகராக அவர் சிறப்பாக செயல்படுகின்றார்.
கேள்வி : இந்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன என்பதற்காக நீங்கள் அவற்றை நிராகரிக்க முடியாது? மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக ராஜபக்சர்கள் இதனை செய்தார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. உங்கள் பதில் என்ன?
பிள்ளையானின் பதில் : மேற்குலகத்தினால் இயக்கப்படும் அரசியல் இயந்திரங்கள் எப்படி செயற்படும் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டமைக்கு யார் காரணம்? மேற்குலகமே காரணம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அவருக்கு சாதகமாக மாறிய சூழ்நிலை காரணமாக தான் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார் என எவரும் தெரிவிக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் அவரது கட்சியான பொதுஜன பெரமுன உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றது.
இதன் அர்த்தம் என்னவென்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாகவே சிங்கள பகுதிகளில் அவருக்கு சாதகமான நிலை காணப்பட்டது. உள்ளூராட்சி தேர்தலுக்கு பிந்தைய தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற வேண்டும் என்பதே முடிந்த முடிவாக காணப்பட்டது.
எனினும் மேற்குலகம் எப்போதும் தனக்கு சார்பானவர்களை இங்கு ஆட்சியில் அமர்த்த விரும்பும். மனித உரிமை பேரவையின் அமர்வுக்கு முன்னதாக சனல் 4 நாடகங்கள் போன்றவை இடம்பெறுவது வழமை. உலகம் எங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து சனல் 4 இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு ஆதரவளித்துள்ளனர்.
அவ்வாறான சக்திகள் அசாத் மௌலானாவை அணுகி அவரை பயன்படுத்தியுள்ளன. நான் ஒரு விடயம் குறித்து கவலையடைகின்றேன். சஹ்ரான் ஹாசிமினால் மூளைச்சலவை செய்யப்பட்ட பல இளைஞர்கள் 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அவரது தீவிரவாத அமைப்புக்கு விசுவாசமான பலர் உள்ளனர். இன்று அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை. இன்று முக்கியமான விடயத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதே இடம்பெறுகிறது. எதிரணி அரசியல்வாதிகள் அரசியல் செய்யக்கூடாது.
அவர்கள் நாட்டின் அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு குறித்து பேசவேண்டும். ஆனால், அவர்கள் நாடாளுமன்றத்தில் அர்த்தமற்ற உரைகளை ஆற்றுகின்றனர். அவர்கள் என் பக்கம் விரல்களை நீட்டுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை நான் சிறையில் இருந்தேன். சிறைக்குள் இருந்தவாறு என்னால் எவ்வாறு பேரழிவு சதித்திட்டத்தை தீட்ட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |