இன்று வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு..! நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் இன்று (22) தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ள நிலையில் அலுத்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்தில் இன்று சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பல சிறப்புப் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அறிவிக்கப்படவுள்ள தீர்ப்பு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ளது.

நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், கடந்த மாதம் 24ஆம் திகதி நிறைவடைந்தன.
இதற்கமைய, வழக்கின் தீர்ப்பு இன்று வழங்குவதற்கு மூவரடங்கிய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.