சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்
கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை "சிறப்பு திட்டமாக" பெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த, 02.01.2021 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதனை அதிகாரத்தின் முழு உரிமையின் கீழ் கொள்கலன் முனையமாக செயற்படுத்துவதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.
நிர்மாணப் பணிகள்
இதன்படி, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த கொள்கலன் முனையத்திற்கான கிரேன்கள் கொள்வனவு செய்வதற்கான கொள்முதலும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் தனியார் முனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரிச் சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனைய திட்ட பின்னணி
இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கூட்டுத் திட்டமாக, 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் காணப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளதை தொடர்ந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக தேசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அதற்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச பங்காளர்களுடனான உறவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அப்போதைய துறைமுக அதிகார சபை தெரிவித்தது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக கிழக்கு முனையத்தின் 100 வீத உரிமம் இலங்கை துறைமுகங்கள் அதிகார சபைக்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் நடவடிக்கை நிறுவனம் எனும் பெயரில் புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் அதில் 51 வீத உரிமை இலங்கைக்கு கிடைக்கும் எனவும், ஏனைய தரப்பினர் 49 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் துறைமுகங்கள் அதிகார சபை விளக்கியிருந்தது.
இந்நிலையில், மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிட்ப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் 2021 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இது, 75 ஹெக்டயார் பரப்பளவில் 1,320 மீற்றர் நீளத்தைக் கொண்ட திட்டமாக காணப்படுகிறது.
நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும், கப்பலில் இருந்து கரை வரை இயக்கப்படும் 12 பளுதூக்கிகள் (STC) மற்றும் தண்டவாளங்களில் இயங்கும் 40 கிரேன் பளுதூக்கிகளுடன் (RMG) ஒரு முழுமையான முனையத்தை இலங்கைத் துறைமுக அதிகார சபை கொண்ட திட்டமாக இது காணப்படுகிறது.
இதற்கான மொத்தச் செலவு 510 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அக்சஸ் என்ஜினியரிங் பி.எல்.சி (Access Engineering PLC) மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனி (China Harbour Engineering Company LTD) இணைந்து இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்கின்றன.
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்-Colombo Port Eastern Terminal Construction Work Inaugurated “துறைமுகங்களின் தரவரிசைக்கான 2021 ஆம் ஆண்டின் அல்ஃபலைனர் அளவுகோலின்படி, உலகில் 23ஆவது இடத்தில் காணப்பட்டது.
புதிய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 13ஆவது இடத்தைப் பெறும்” என, அப்போதைய துறைமுக விவகாரங்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |