இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவிற்கு 3000 முறைப்பாடுகள் பதிவு!
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 237 வழக்குகள்
இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம உத்தியோகத்தர்கள், 3 காதி நீதிபதிகள், இரண்டு வருமான பரிசோதகர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த சுற்றிவளைப்புக்களில் 22 பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதேகாலப்பகுதியில் 56 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 237 வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், வருடத்தில் 19 பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |