தமிழரசு கட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது: ஈஸ்வரபாதம் சரவணபவன்
நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தான் வந்தோம். அங்கே ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு கொண்டு வருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒரு தனி நபரின் ஆதிக்கத்தினால் இலங்கை தமிழர் கட்சியில் இருந்து பலர் வெளியேறியுள்ளார்கள்.
கட்சியின் நிலை
இறுதியில் தலைவரும் பதவியில் இருந்து விலகியுள்ளார். நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சட்டத்தரணி கே.வி.தவராசாவும் கட்சியில் இருந்து விலகி உள்ளார். யார் யார் கட்சியில் இருந்து விலகினார்கள் என பார்ப்போமேயானால், 2010ஆம் ஆண்டிலிருந்து அடுக்கிக் கொண்டே செல்லலாம். எத்தனை பேர் விலகியுள்ளார்கள் என்று.
எல்லோரும் தொடர்ச்சியாக யாழ். மண்ணில் இருந்தவர்கள். ஆனால் யாழில் இல்லாத ஒருவருடைய ஆதிக்கம் மேலோங்கி, அந்தக் கட்சியானது ஜனநாயக கட்சி என்று சொல்ல முடியாத நிலையில் செயற்படுகின்றது.
உண்மையில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு எமக்கு விருப்பமில்லை. ஆனாலும்
தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வெளியே வந்து எமது ஜனநாயக ரீதியிலான பலத்தை
காட்ட வேண்டிய தேவை எமக்குள்ளது.
மக்களை ஒன்று சேர்க்க வேண்டியிருக்கிறது. எல்லோரையும் உள்வாங்கி, எல்லோருக்கும் சமபங்கு கொடுத்து, நாங்கள் செயற்பட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம்.
நாங்கள் தற்போது ஒரு சுயேட்சையாக தேர்தலில் களமிறங்கினாலும் அது நாளடைவில் ஒரு கட்சியாக பரிணமிக்கும். வருங்காலத்தில் இளைஞர்களை அனைத்து விதத்திலும் பயிற்றப்படுத்தி, மாகாண சபையோ அல்லது பிரதே சபையோ அனைத்திலும் இந்த இளைஞர்கள் ஒரே வழியில் நின்று இந்த கட்சியை வழிநடத்த வேண்டும்.
இதன்போது, நிச்சயமாக வெற்றி கிடைக்கும். ஜனநாயகம் தழைக்க வேண்டும், சர்வதிகாரம் தோற்க வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
காணொளி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |