ஊடகங்களும் பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: ஈஸ்வரபாதம் சரவணபவன்
அரசியல் கட்சிகள் எவ்வாறு ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க முனைகின்றதோ அதே போன்று ஊடகங்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இன்றைய சூழலில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்(Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளார்.
யாழ்.(Jaffna) ஊடக அமையத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் படுகொலை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசனின் படுகொலை நடந்து 20 வருடங்கள் கடக்கின்ற நிலையில் இன்றுவரை அவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.
கொலை செய்தவர்கள் யார் என தெரிந்தும் மௌனம் சாதிக்கபடுகின்றது. அவ்வாறே சிவராமும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
மக்களுக்கு தமது எழுத்து மூலம் செய்திகளை வழங்கியமையும், உணர்வுபூர்வமாக சிந்திக்க தூண்டியதும் உண்மையில் அதில் வித்தியாதரனும் ஒருவரே அவரும் இவ்வாறு மக்களை சிந்திக்க செய்தவர்.
இந்த நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எது நடந்தாலூம் கேட்பார் இல்லை. இதன் காரணமாக ஊடகப்பணிக்குள் வர தயங்கும் நிலை காணப்படுகிறது.
ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தாலும் நீதி நிலைநாட்டபடாது என்ற எண்ணபாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
நிமலராஜனின் கொலையும் திட்டமிட்டு மேற்கொள்ளபட்டது. அதனை மேற்கொண்டவர்கள் யார் எனவும் அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்.
இதே நிலை தான் நடேசன் மற்றும் சிவராமிற்கும் நடந்தது பல முயற்சிகள் எடுக்கபட்ட பொழுதிலும் அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தளரக்கூடாது, ஊடகவியலாளர்களின் பலம் குன்றியுள்ளது.
உண்மையில் ஊடகவியலாளர்கள் தான் எங்களுடைய தலைவிதியை கொண்டு செல்லமுடியும் இது தான் உண்மை. இப்பொழுது நாங்கள் பிரிந்து பல்வேறு கிளைகளாக நிற்கின்றோம்.
இதேவேளை, வெளிநாடுகளும் அரசாங்கத்துக்கு சார்பாக உள்ளதே தவிர தமிழர்களுக்கு சார்பாக இல்லை.
எங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தினால் போராடி எமக்கான நீதியினை பெறலாம். இதனை தான் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தற்பொழுது இருக்கின்ற சூழலில் தமிழ் தேசிய கட்சிகள் கோரிக்கைகளை முன்வைக்கின்ற பொழுது ஒற்றுமையாக இணைந்து வாருங்கள் என எள்ளி நகையாடுகின்றார். தற்பொழுது பொதுவேட்பாளர் என்ற விடயம் பேசப்படுகிறது.
இதே நிலையை அனைத்து ஊடகவியலாளரும் முன்னெடுத்தால் நிச்சயமாக போராட்ட காலத்தில் தமிழர்கள் வென்ற காலகட்டத்தில் அரசாங்கத்தினை செவிமடுக்க செய்யலாம்.
இதனடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவு தினம் போன்று அனைவரது நினைவு தினங்களும் முன்னெடுக்கப்பட்டு மக்களுக்கு செய்திகள் அவர்களது வரலாறுகள் சென்றடைய வேண்டும்.
ஊடகவியலாளர்களை தாண்டி பொதுமக்களையும் இணைக்க வேண்டும். அப்பொழுது தான் எமக்கு நீதி கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |