கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமற்றது – உபுல் ரோஹன
கோவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமற்றது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இரணை தீவில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீவானது 12 சதுர கிலோ மீற்றர் பரப்பினைக் கொண்டது எனவும் இங்கு 108 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேர் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீவில் நான்கு குடிநீர் கிணறுகளே காணப்படுவதாகவும், இங்கு கோவிட் சடலங்களை புதைப்பதனால் குடிநீர் பிரச்சினை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் இரணைதீவில் கோவிட் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து தீர்மானிக்க வேண்டுமென உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.