மலையகத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! (Photos)
மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுகள் , வெள்ளபெருக்கு மற்றும் ஒரு சில இடங்களில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு
ஹட்டன் - காமினிபுர பகுதியில் ஏற்பட்ட இரு வேறு மண்சரிவு நிகழ்வுகள் காரணமாக இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் இந்த இடத்தில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து தடை
மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில் ரிகாடன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் மற்றும் வீதி போக்குவரத்து சபை ஊழியர்கள் இணைந்து ஏற்பட்ட மண்சரிவை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
இதேவேளை, மஸ்கெலியா - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹப்புகஸ்தலாவ 5ம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா - பிளக்பூல் பகுதியில் இன்று (3) காலை ஏற்பட்ட மண்சரிவினால் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிரதேசவாசிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து மண்சரிவை அகற்றி தற்போது ஒரு வழி போக்குவரத்தாக மாற்றியுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - பகத்தொழுவ பகுதியிலும், தலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை, கெலிவத்தை மற்றும் கடியலென்ன போன்ற பகுதிகளிலும், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் சென்.கிளயார் மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவினால் அவ்விடத்தில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளபெருக்கு
மேலும், நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக விரைவாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல இடங்களில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்துள்ளதனால் அடிக்கடி மின்சார துண்டிப்பும் ஏற்பட்டு வருகின்றன.
மலையகத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு
குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் வெள்ளம் காரணமாக தமது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கொட்டகலை - பத்தனை கிறேக்கிலி தோட்டம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீரை ஏந்தும் கிளை ஆறான பத்தனை ஆறு பெருக்கெடுத்து மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களில் இதேபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நுவரெலியா மாவட்ட விவசாய திணைக்களம் எவ்வித நிவாரண உதவிகளையும் தரவில்லை எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.