மீண்டும் வழமைக்கு திரும்பிய துபாய் சர்வதேச விமான நிலைய சேவைகள்
துபாயில்(Dubai) பெய்துவரும் வரலாறு காணாத மழையால் கடந்த 2 நாட்களாக அந்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1இல் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் 24 மணி நேரத்தில் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முழு செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழை
இது குறித்து துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''அமீரகத்தில் கடந்த 16ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் ஸ்தம்பித்தது. இதில் துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்ததால் பல முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வந்த நிலையில் தற்போது நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது விமான ஓடுபாதையில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
விமானங்கள் இரத்து
வெள்ளத்தில் மூழ்கிய ஓடுபாதையில் நிலைமை சீராகும் வரை விமானங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று (வியாழக்கிழமை) காலை வரை 2 நாட்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 1,244 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அல் மக்தூம் மற்றும் அபுதாபி ஷேக் ஜாயித் விமான நிலையங்களுக்கு 61 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
நேற்று காலை முதல் விமான நிலையத்தின் முனையம் 1இல் பகுதி செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இதில் இருந்து சுமார் 50 சர்வதேச விமானங்கள் விமான நிலையத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், எமிரேட்ஸ் மற்றும் பிளை துபாய் விமானங்கள் முனையம்3 வழியாக இயக்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |