வேட்புமனு நிராகரிப்பு விவகாரம்: சங்கு கூட்டணிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குகள் உயர்நீதிமன்றின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வினால் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இன்று (28) உயர் நீதிமன்றத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
வழக்கு விசாரணை
எமது கட்சியின் வழக்குகள் சார்பாக சட்டத்தரணிகள் மூத்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் (Nizam Kariapper) தலைமையில் உயர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாண தேர்தல் அத்தாட்சி அலுவலர்களால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட ஒன்பது வழக்குகளும், அதே காரணத்துக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட ஒரு வழக்கும், மன்னார் - மாந்தை பிரதேச சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்ட வழக்கு உட்பட பதினொரு வழக்குகளோடு சேர்த்து வேறு காரணங்களுக்காகவும் நிராகரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த விசாரணையின் முடிவில் சட்டமா அதிபர் தலைமையில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணியை வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளோடும் தேர்தல் ஆணையகத்தின் முடிவெடுக்கக் கூடியவர்களோடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி சுமுகமான முறையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விடயங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.
பிறப்புச் சான்றிதழ்
அந்த முடிவிற்கு பின்னராக வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 10 மணி அளவில் இந்த வழக்குகள் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இளையோரின் வயதை உறுதிப்படுத்த வேட்புமனுக்களோடு சமாதான நீதவானாலோ அல்லது வேறு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒருவராலோ அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகள் எம்மால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
எமது கட்சியின் வேட்பு மனுக்கள், பிறப்புச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தோடு யாழ்ப்பாண தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் நிராகரிக்கப்பட்டிருந்தன.
தேர்தலுக்கான தடை உத்தரவு
பெரும்பாலும் இந்த நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நீதிமன்றின் வழிப்படுத்தலில் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
சட்டத்தில் உள்ள படி அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி என்பது யாரால் அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படாத வரையில், வழக்கத்தில் உள்ளபடி அத்தாட்சிப்படுத்தப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற நிலைப்பாடு பரவலாக நிலவுகிறது.
இந்த வழக்கங்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொழுது ஏற்றுக்கொள்ளப்படமுடியாது எனில் சட்டத்துக்கான வியாக்கியானங்களை நிலை நிறுத்துவதற்கான வாதப் பிரதிவாதங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
இதனால் தேர்தலுக்கான தடை உத்தரவை பெற்றுக்கொண்டு வழக்குகளை தொடர்ந்து நடாத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்-கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
