நீர் விநியோகத்திற்கு பாதிப்பு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிலவும் வறட்சியான காலநிலையில் குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வறட்சியான காலநிலை
அந்த அறிக்கையில், இந்த நாட்களில் நாட்டில் நிலவிவரும் மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில், நுகர்வோரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயர் நிலப் பகுதிகளில் உள்ள நீர் நுகர்வோருக்கு தண்ணீரை விநியோகிக்கும்போது குறைந்த அழுத்தம் ஏற்படக்கூடும் என்று தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம்
குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு சம அளவில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.
எனவே, வாகனங்களை கழுவுதல், தோட்ட நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.