திருகோணமலையில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் ஆரம்பகட்ட நிகழ்வு (Photo)
திருகோணமலை மாவட்டத்தில் வருமானம் குறைந்த 546 வறிய குடும்பங்களுக்கான உலர்
உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று(2) திருகோணமலை மாவட்ட
செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றுள்ளது.
கோமரன்கடவெவ, மொறவெவ மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாட்கூலி வேலையை மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் ஆரம்பகட்ட நிகழ்வு
இதனடிப்படையில் குச்சவெளிப் பிரதேச சபையை சார்ந்த இரு பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் இன்று வழங்கி வைத்தார். இந்த உலர் உணவுப் பொதி ஒன்றின் பெறுமதி ரூ 6190 ஆகும்.
மேலும் குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள போஷாக்குக் குறைவான 80 சிறுவர்களுக்கும், 89 கர்ப்பிணித் தாய்மாருக்கும் தலா 7500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மூலமாகப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மின்சார நெருக்கடி காரணமாக சிறுவர்களது கல்விச் செயற்பாட்டை தடங்களின்றி மேற்கொள்ள 740 மின்னேற்றும் மின்விளக்கு (charger light) வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் அரச சார்பற்ற நிறுவனமான சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.அரியரட்ணம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மேலதிக அரசாங்க
அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களுடைய ஒருங்கிணைப்பு
அதிகாரி எ.எம்.எஸ்.பி. அத்தநாயக்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.