2009 ஆம் ஆண்டு வரை நாட்டில் போதைப்பொருள் பாவனை இல்லை! அருட்தந்தை சுட்டிக்காட்டு
2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட,கிழக்கில் போதை பொருள் பாவனை பூச்சியமாக இருந்ததாக கட்டைக்காடு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார்.
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய நாட்டில் போதை பொருளின் தாக்கம் அதிகரித்துள்ளது, குறிப்பாக எங்களுடைய தமிழர் தாயகம் வரலாறு காணாத அளவிற்கு போதை பொருளின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளது.
போதைப்பொருள் பாவனை
பலர் இந்த போதைப்பொருளுக்கு நாளாந்தம் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள், போதைப் பொருள் தொடர்பான செய்திகளை நாங்கள் அடிக்கடி பத்திரிகைகள் வாயிலாக பார்க்கின்றோம்.

எங்களுடைய கடந்த கால வரலாறு அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்கும்.2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழர் தாயகத்தில் போதைப் பொருள் பூச்சியமாக இருந்தது.
கோரிக்கை
ஆனால் இப்போது போதைப் பொருள் தொடர்பான புதுப்புது விடயங்களை நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம்.

இன்று வாழ வேண்டிய பலர் தங்களுடைய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவே 2009 ஆண்டிற்கு முன்னர் இருந்த வாழ்வியலை மீண்டும் கட்டியெழுப்பி நாம் அனைவரும் போதையற்ற ஒழுக்க சீலர்களாக சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென கேட்டுக் கொண்டார்.