அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் குவிந்துள்ள போதைப்பொருள் மாதிரிகள்
அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் குவிந்துள்ள ஒரு கிலோகிராமுக்கு குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி அயிஷா ஜினசேன விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வு
பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த போதிலும், திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மாதிரிகளால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மேலதிக சேமிப்பு வசதிகளை வழங்க முடியவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி, பரிசோதனை முடிவடைந்த போதைப்பொருள் மாதிரிகளை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திலிருந்து அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சு, நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் கோரியிருந்தது.
அதன்படி, இந்தக் கோரிக்கையைக் கருத்தில் கொண்ட நீதிச் சேவை ஆணைக்குழு, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் குவிந்துள்ள ஒரு கிலோகிராமுக்கு குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நீதவான்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |