ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்தும் தீவிர சிகிச்சை
ஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதான குழந்தைக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை
முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு வயதான குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் குழந்தையின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குழந்தை ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டுள்ளமைக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.
குழந்தையின் தாய் தெரிவித்த விடயம்
அதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் வைத்தியர்கள் விசாரணை செய்த போது, குழந்தையின் தந்தையான தனது கணவர் முன்னர் போதைப்பொருள் பாவித்ததாகவும், ஆனால் தற்போது அவர் பாவிப்பதனை கைவிட்டு விட்டார் எனவும், எனினும் குழந்தை எவ்வாறு போதைப்பொருளை உட்கொண்டது என தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தொடர்ந்தும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, குழந்தை போதைப்பொருள் உட்கொண்டு இருந்தமை தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் ஊடாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸார் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.