போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுத் திட்டம்: அநுர தலைமையில் இன்று நுவரெலியாவில்
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று(11.02.2026) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு நுவரெலியா நகரில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்
மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரதான சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாகப் போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் ஊடாக, மக்களைப் போதைப் பிடியிலிருந்து விடுவித்து, அவர்களைச் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதிக பங்களிப்பு வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இதன்போது நடைபெறவுள்ளது.
மத்திய மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுப்பதற்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.