மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள தடுப்பணையை கடக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தண்ணீரில் அடித்து செல்லபட்டு மூழ்கிய குடும்பஸ்தர் நீண்ட தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் வயல் உள்ளாத்து கட்டு பகுதி அருகில் உள்ள ஆலயடிக்கட்டு பகுதியில் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலை..
இச்சம்பவத்தில் தண்ணீரில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி பிள்ளையுடன் குறித்த பகுதிக்கு வருகை தந்து, பின்னர் தனியாக மோட்டார் சைக்கிளில் முன்செல்ல பின்னால் மனைவியுடன் பிள்ளையும் ஆற்றுக்கு குறுக்காக உள்ள தடுப்பணையுடன் இணைந்த பாலத்தில் பயணம் செய்துள்ளனர்.
இதன் போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் தனியாக முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற 32 வயது மதிக்கத்தக்க அப்துல் லத்தீப் இக்ராம் என்பவர் ஆற்றினுள் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் விடுமுறை நிமிர்த்தம் நாடு திரும்பி இருந்த நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
உறவினர்களிடம் கையளிப்பு
இந்நிலையில், நீரில் காணாமல் சென்றவரை தேடுவதற்கு அப்பகுதியில் நீரோட்டத்தை குறைக்கும் முகமாக தற்காலிகமாக தடுப்பணை மூடிகள் சில உரிய தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய நீர்பாசன திணைக்கள அதிகாரிகளினால் மூடப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேடுதலின் கடும் முயற்சியின் பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |