இலங்கையில் தெய்வமாக மாறிய சாரதி : தெய்வாதீனமாக உயிர் தப்பிய 50 பயணிகள்
நாவலப்பிட்டி பேருந்து சாரதி நொடிப்பொழுதில் எடுத்த முடிவால் 50 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலொஸ்பாகேயிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மலையில் மோதி நேற்று விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள், பயணிகள் ஐவர் மற்றும் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தடுக்கப்பட்ட விபத்து
நாவலப்பிட்டி தொலொஸ்பாகே பிரதான வீதியில் நாவலப்பிட்டி உடுவெல்ல பிரதேசத்தில் நேற்று காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பக்கத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாகவும் அதேநேரம் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் சாரதி தனது உயிரை பணயம் வைத்து பேருந்தை மலையின் மீது மோதச் செய்து நிறுத்துவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
சாரதியின் செயல்
அதற்கமையவே மலையில் மோதி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து விபத்துக்குள்ளான வீதியின் மறுபுறம் சுமார் 300 மீற்றர் உயரமான மதில் சுவருடன் கூடிய பள்ளம் காணப்படுவதாகவும், பேருந்தின் சாரதி பேருந்தை பள்ளத்தில் விழ விடாமல் தடுத்து பெரும் விபத்தை தடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து விபத்துக்குள்ளான போது, குறித்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் ஐம்பது பேர் பயணித்துள்ளனர்.
சாரதி தனக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் மலையில் மோதி பேருந்தை நிறுத்தியிருக்கவில்லை என்றால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.