கலாஓயா வெள்ளத்தில் 68 பயணிகளுடன் சிக்கிய பேருந்து சாரதி கைது
கலாஓயா பாலத்தில் 68 பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெள்ளத்தில் பேருந்தினை செலுத்திய சாரதி, கொலை முயற்சி குற்றச்சாட்டில், இராஜாங்கனை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாலியவெவ, மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சாரதி, கடந்த 27 ஆம் திகதி அனுராதபுரம்-புத்தளம் வீதியில் தனியார் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.
பயணிகளின் உயிருக்கு ஆபத்து
இதன்போது கிராம மக்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்து, கலா ஓயா விகாரைக்கு அருகே வெள்ளத்தில் பேருந்தினை ஓட்டிச்சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளத்தில் பேருந்தை செலுத்துவது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்தும் பேருந்தை செலுத்தியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது பேருந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதாகவும், பயணிகளை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு சம்பவத்தில் பயணி ஒருவரும் உயிரிழந்திருந்தார்.
சம்பவத்தில் பேருவளை, ஹெனவத்தையைச் சேர்ந்த 66 வயதான ஏ.எஸ். முகமது நவாஸ் என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.