ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் - டக்ளஸ் வேண்டுகோள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று ஆற்றிய சிம்மாசன உரை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் அபிலாசைகள்
தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும், ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் பிரதிபலித்திருக்கின்றமையை வரவேற்பதாகவும், குறித்த விடயங்கள் படிப்படியாக முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுவதற்கு, பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈ.பி.டி.பி. கட்சியினால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டிருந்த, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வு மற்றும் காணிப் பிரச்சினைகள், யுத்தப் பாதிப்புகளை நிவர்த்தி செய்தல் உட்பட்ட விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை எமது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் அரசியல் அணுகுமுறைகளுக்குமான வெற்றியாகவே கருதுகின்றோம். இவ்வாறான சூழல்களை ஏனைய தமிழ் தரப்புக்களும் எமது மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான சந்தர்ப்பங்களாக பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக ஜனாதிபதியினால் உருவாக்க முயற்சிக்கப்படுகின்ற அனைத்துக் கட்சி
அரசாங்கத்தினை தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான ஆரோக்கியமான
தளமாக அனைத்து தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும் எனவும்
தெரிவித்துள்ளார்.