விடுதலைப் புலிகள் இல்லாததால் சிதைந்து போன கூட்டமைப்பு : அமைச்சர் டக்ளஸ்
உருண்டோடிக்கொண்டிருக்கும் உருழைக்கிழங்குகளால் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ். (Jaffna) சுன்னாகத்தில் இன்று (11.05.2024) இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுக்கள்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நீரின் ஊடாக நெருப்பையும் கொண்டு செல்லும் ஆற்றல் உள்ளவர்கள் ஈ.பி.டி.பியினர் என்ற அரசியல் அச்சம் காரணமாகவே ஆங்காங்கே பதுங்கியிருந்த சில தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து உருழைக்கிழங்கு மூட்டைபோன்று இறுகக்கட்டப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்றை அன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.
புலிகள் அமைப்பின் தலைமை இல்லாதொழிந்த பின்னர் இன்று அந்த கூட்டமைப்பு என்ற உருழைக்கிழங்கு மூட்டை கட்டவிழ்ந்து விட்டதுடன் திக்குத்திசை தெரியாது ஊருண்டு ஓடிக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறானவர்களால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதுவித விமோசனங்களும் கிடைக்கப்போவதில்லை. 1987 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆயுதப் போராட்டம் எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்கு சாத்தியமற்றதென முடிவெடுத்து நாம் அரசியல் ஜனநாயக நீரோட்டத்தில் காலடி வைத்தபோது சிலர் எம்மை கேலி செய்து எள்ளி நகையாடியிருந்தனர். ஆனாலும் நாம் அதற்கு செவி சாய்த்திருக்கவில்லை.
இந்த ஜனநாயக வழிமுறையின் ஊடாக 1994 ஆம் ஆண்டு நாம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 9 நாடாளுமன்ற உறுப்பினர்களாக அதாவது, யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் 9 மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றிருந்தபோது அவ்வாறு ஏளனம் செய்தவர்கள் கூனிக் குறிகிப்போயினர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
இவ்வாறாக சாத்தியமான வழிமுறையூடாக நாம் முன்னெடுத்த பொறிமுறையின் வெற்றியால் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் எம்மை நோக்கி அணிதிரளத் தொடங்கியிருந்தனர்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத பிரபாகரன் எமது அரசியல் வளர்ச்சியை கண்டு அச்சமுற்று தன்னால் அச்சுறுத்தலுக்குள்ளாகி ஒளிந்திருந்த தமிழ் தரப்பினரை அழைத்து தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் வகையிலான கட்டமைப்பாக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டதும் எம்மை அரசியல் ரீதியில் வெற்றிகொள்ள முடியாதென தெரிந்திருந்த நிலையில் எம்மீது அதிகளவான சேறு பூசல்களையும் அவமானங்களையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து மக்களிடையே பிரசாரங்களை தீவிரமாக முன்னெடுத்து தமது தேர்தல் வெற்றிகளை உறுதி செய்து கொண்டிருந்தனர்.
அனால் “உண்மை வெகுநாள் உறங்காது” என்பது போன்று 2009 இல் புலிகள் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் அந்த கூட்டமைப்பு தமது சுயரூபங்களை காட்டத் தொடங்கியுள்ளது மட்டுமல்லாது அதன் உண்மை முகங்களும் மக்களிடையே வெளிப்பட தொடங்கியது.
அத்துடன் யுத்தத்தால் நொந்துபோயிருந்த தமிழ் மக்களை தமது சுயநலங்களுக்காக மீண்டும் பகடைக்காய்களாக பயன்படுத்த தொடங்கினர் கூட்டமைப்பினர். இதன் காரணமாக மீண்டும் மக்கள் அவலங்களை சந்திக்க நேரிட்டது”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |