மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின்(Mavai Senathirajah) புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.
உடல்நிலை பாதிப்பால் கடந்த 29ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி தனது 82 வது வயதில் உயிரிழந்திருந்தார்.
மாவையின் புகழுடல்
மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் (01.02.2025) அவரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் பகிர்ந்துகொண்டார்.
அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, “மூத்த அரசியல் போராளியான அண்ணன் மாவை சேனாதிராசாவின் மறைவு, ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறையின் முடிவாக அமைந்துள்ளது.
மேலும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக 60ஆம் ஆண்டுகளிலேயே தீவிரமாக செயற்பட்டவர்.
ஒரு தலைமுறை முடிவு
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், அதற்கான நியாயத்தினை புரிந்து கொண்டவராக போராட்ட இயக்கங்களுடன் உறவுகளை பேணி ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர், சூழல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு நாம் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்ட காலங்களிலும் அவருக்கும் எமக்கும் இடையில் புரிந்தணர்வு பேணப்பட்டு வந்தது.
எனினும், கால ஓட்டத்தில் அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி சுவீகரித்துக் கொண்ட நிலைப்பாடுகள், எமக்கும் அவருக்கும் இடையில் கருத்தியல் வேற்றுமைகளை ஏற்படுத்திய போதிலும், பரஸ்பர புரிதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த வகையில் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறை முடிவிற்கு வந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு நாளை(2) பிற்பகல் 3 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |