விடுதலைப் புலிகளின் தலைவராலேயே தலைவர்களும், முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டனர்! சபையில் டக்ளஸ் (Video)
தம்முடைய தலைவர்கள், சகாக்கள், உறுப்பினர்கள் யாரால் கொல்லப்பட்டார்களோ அவர்களையே தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் கொண்டாடிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எமது மக்கள் ஏராளமான பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மக்களின் பிரச்சினைகள்
அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள், அரசியல் உரிமை தொடர்பிலான பிரச்சினைகள், அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினை, காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான பிரச்சினை, சொந்த காணி நிலங்கள் கைக்கு எட்டாமை தொடர்பான பிரச்சினை என பிரச்சினைகளையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் எமது மக்களுக்கு பத்தோடு பதினொன்றாவதாக பொருளாதார பிரச்சினை காணப்படுகிறது.
இவற்றில் தலையாய பிரச்சினைகளை நாம் விரைந்து தீர்க்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சினைகள் யாவும் முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.
முதலாம் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடரும் திரைப்படங்கள் போன்று மீண்டும் இங்கே ஜெனிவா காட்சிகள் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சர்வதேசம் தமிழர்களை ஏமாற்றுவதாக கூறும் நிலைமை
இங்கே எமது மக்களுக்கு தும்மல் வந்தால் சர்வதேசத்திடம் செல்வோம், சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வதேசத்தை நம்புகின்றோம் என்றெல்லாம் கதை விடுகின்ற சக தமிழ் அரசியல் தரப்பினர், சர்வதேசம் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறும் நிலைமைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
எமது பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறையே சிறந்தது என நாம் நம்புகின்றோம். அதுவே காத்திரமானதாக இருக்கும்.
சக தமிழ் இயக்கங்களின் அரசியல் கட்சிகள் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்ததாக கூறப்படுகின்ற பல குழுக்கள் இருப்பினும் அவை அரசியல் கட்சிகளாக பதிவில் இல்லாத காரணத்தால் ஏனைய சக இயக்கங்களினது அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கொல்லப்பட்டமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனால் தான் என்பதை இங்கு சுயபுத்தியுள்ள எவரும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.
அவ்வாறு கொல்லப்பட்ட தமது தலைமைகளுக்கும், சகாக்களுக்கும் மரியாதை செலுத்தி நினைவுகூரலை முன்னெடுக்காமல் யாரால் தம்முடைய தலைவர்கள், சகாக்கள், உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்களோ அவர்களை தொடர்ந்தும் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இவர்கள் தமது மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது என கூறியுள்ளார்.