நீதிமன்றில் முன்னிலையான டக்ளஸ்!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது.
குறித்த பத்திரிகை நிறுவனத்திடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரிய மானநஷ்ட வழக்கின் முன்விளக்க கலந்துரையாடல் இன்றையதினம் (19.05.2025) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி எஸ். சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்றது.
'தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவராக்க அரசு முயற்சிப்பதேன்? - நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி கேள்வி' என்ற தலைப்பில் 2012.11.07 ஆம் திகதியன்று குறித்த பத்திரிகையில் வெளியான செய்தி, தனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட பொய்யான செய்தி என்பதை சுட்டிக்காட்டி டக்ளஸ் தேவானந்தாவினால் நிறுவனத்துக்கு எதிராக 500 மில்லியன் நட்ட ஈடு கோரிய மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஒருபக்க விளக்கம்
வழக்கு விசாரணைகளுக்கு எதிர் தரப்பினர் தொடர்ச்சியாக சமுகமளிக்காமையால் ஒருபக்க விளக்கத்தின் அடிப்படையில் யாழ். மாவட்ட நீதிமன்றம் வழக்காளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு, நட்ட ஈடாக 2 மில்லியன் ரூபாவை பத்திரிகை பிரசுரிப்பாளருக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திரந்தது.

இதைத் தொடர்ந்து குறித்த பத்திரிகை நிறுவனம், வழக்கை மீள் விசாரணைக்கு உட்படுத்துமாறு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் வழக்கு விசாரணை இன்றையதினம் (19) யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்தரன் முன்னிலையில் முன்விளக்க நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேலதிக முன்விளக்க கலந்துரையாடலுக்காக எதிர்வரும் ஜீன் மாதம் 6 ஆம் திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |