இலங்கையில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் Door to Door விநியோக முறை
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இலங்கையில் உள்ள வீடுகளுக்கு பொருட்களை அனுப்ப பயன்படுத்தும் Door to Door விநியோக முறையை சுங்கத்துறை இடைநிறுத்திய நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த Door to door விநியோக முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்கள் விநியோகம்
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் வெளியீடு இடைநிறுத்தப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பாதுகாப்பு, உரிமையாளர்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் மற்றும் சட்டவிரோத பொருட்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்படுவதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை இடைநிறுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் நாட்டிலுள்ள அவர்களது உறவினர்களுக்கும் சிறந்த சேவையை வழங்கும் இந்த சேவையை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.