அலட்சியத்தால் விபரீதம் நேரலாம்! பெற்றோர்களுக்கான பதிவு
இன்றைய இயந்திர மயமான உலகில் அனைவரும் கல்வி, தொழில், வீட்டு வேலை என எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றோம்.
இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலர் எதற்கு உழைக்கிறோம் என்ற அடிப்படை காரணத்தையே மறந்து இயந்திரம் போல் உழைத்துக்கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை.
உழைப்பு, கல்வி, தொழில் என அனைத்தும் நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், எமது குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாக வாழவும் தான் என்பதை இன்று நம்மில் பலரும் மறந்துவிட்டோம்.
பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர் வேலைக்காக ஓடுவதால் பிள்ளைகளை சரிவர கவனித்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இலைமறை காயாகவே இருந்துவிடுகிறது
இது முற்றிலும் தவறான விடயம். இப்படி நாம் நடந்துக் கொள்வதனால் வீட்டிலுள்ள சிறுவர்கள் எந்தளவு பாதிக்கப்படுகின்றார்கள் என்பது குறித்து இன்று பலரும் அறிந்திருப்பதில்லை.
அதனாலேயே இன்று பல சிறுவர்களின் திறமைகள் மட்டுமல்ல அவர்கள் அனுபவிக்கும் துஷ்பிரயோகங்கள், வலிகள் வேதனைகள் என அனைத்தும் இலைமறை காயாகவே இருந்து விடுகிறது.
இன்று சிறுவர்கள் மத்தியில் பாலியல் முறைகேடுகள் அதிகமாக காணப்படுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இது குறித்து எத்தனை பெற்றோர்கள் இன்று விழிப்புணர்வுடன் நடந்து கொள்கின்றனர் என்பது கேள்விக்குறியான விடயமாக உள்ளது. பாலியல் முறைகேடு (sexual abuse) என்பது பாலியல் துன்புறுத்தல் எனவும் அழைக்கப்படுகிறது.
பாலியல் முறைகேடுகள் விரைவாகவும் குறுகிய காலத்திலும் நடைபெறுகிறது. பாலியல் முறைகேடு செய்பவர் துன்புறுத்துபவர் எனவும் குற்றவாளி எனவும் அடையாளப்படுத்தப்படுகிறார்.
சிறுவர் பாலியல் முறைகேடு
ஒரு குழந்தை அல்லது பாலுறவு சம்பந்த வயது குறைவான நபர்களை பயன்படுத்துவது குழந்தைகளுடனான பாலுறவு எனப்படும். இது சட்ட ரீதியாக பாலியல் வன்புணர்வு எனக் குறிப்பிடப்படுகிறது.
சிறுவர் பாலியல் முறைகேடு என்பது சிறுவர் வன்முறையின் ஒரு வடிவமாகும். வயது வந்தோர் அல்லது வயதான இளம்பருவத்தினர் தங்களின் பாலியல் திருப்திக்காக ஒரு குழந்தையை வன்முறைக்கு உட்படுத்தும் ஓர் கொடூரமான நிலைமையாகும்.
உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது
இந்த செயல் குழந்தைகளில் தீவிரமான மற்றும் நீண்டகால உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதனால் பெற்றோர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆய்வுகளின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 18 தொடக்கம் 19 சதவீதம் பெண்களும், 8 சதவீதம் ஆண்களும் குழந்தைகளாக இருந்த போது பாலியல் முறைகேட்டிற்கு ஆளானதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பலான பாலியல் முறைகேடுக் குற்றவாளிகள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுடன் அறிமுகமானவர்களாகவே இருக்கின்றனர்.
இதில் 30 சதவீதம் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களான தந்தை, மாமாமார்கள் போன்றவர்களால் பாதிக்கப் பட்டவர்களாகும்.
மேலும் 60 சதவீதம் பாலியல் குற்றவாளிகள் குடும்ப நண்பர்களாகவோ குழந்தைகள் காப்பகங்களில் உள்ளவர்களாகவோ அண்டை அயலார் போன்ற பிற அறிமுகமானவர்களாகவே இருக்கின்றனர்.
சிறுவர்கள் பாலியல் முறைகேடு வழக்குகளில் சுமார் 10 சதவீதம் மட்டுமே குடும்ப உறவுகளாகவோ அல்லது குடும்ப நண்பர்களாகவோ அல்லாத அந்நிய குற்றவாளிகள் என ஆய்வுகள் கூறுகின்றன.
மருத்துவ அறிக்கைகள்
பெரும்பாலும் சிறுவர் பாலியல் வன்முறைகளுக்கு காரணமானவர்கள் ஆண்களே என கண்டறியப்பட்டுள்ளது. பெண்களில் சுமார் 14 சதவீதம் சிறுவர்களுக்கு எதிராகவும் 6 சதவீதம் சிறுமிகளுக்கு எதிராகவும் குற்றங்களை செய்கின்றனர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சிறுவர் பாலியல் முறைக்கேட்டின் விளைவுகளாக அவமானம், சுய குற்றஉணர்வு, மனசோர்வு, பதட்டம், அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தப் பாதிப்புகள், சுய மரியாதை பிரச்சினைகள், பாலியல் செயலிழப்பு, நாள்பட்ட இடுப்பு வலி, தற்கொலை எண்ணம், ஆளுமைக் கோளாறுகளின் தொடக்கம் மற்றும் இளமை பருவத்தில் பழிவாங்கும் உணர்வுகள் போன்றன அச் சிறுவர்களின் மனதில் தோன்றுவதாக மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இவற்றை தடுக்க வேண்டுமாயின் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தொடுகை பற்றிய பூரண விளக்கமளிக்க வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு நல்ல தொடுகை மற்றும் தவறான தொடுகை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கலந்துரையாட வேண்டியது அவசியம்
மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது மனம் விட்டு பேச வேண்டும். அவர்களில் பிரச்சினைகள், ஆசைகள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாட வேண்டியது மிகவும் முக்கியம்.
மேலும் குழந்தைகள் எதையாவது எம்மிடம் சொல்ல வரும் போதும் எதையாவது கேடக வரும் போதும் அவர்களுக்கு செவி சாய்க்க வேண்டும் அதனை ஒரு போதும் அலட்சியம் செய்ய கூடாது.
நமது இந்த அலட்சியம் அவர்களின் வாழ்க்கையையே திசைத்திருப்பிவிடும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் உழைப்பது, கஷ்டப்படுவது அனைத்தும் நம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக மட்டுமே இதை மறந்து இயந்திரம் போல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இயந்திர வாழ்க்கைக்கு சற்று ஓய்வு கொடுத்து விலை மதிப்பில்லா உறவுகளுக்கும் சற்று நேரம் ஒதுக்கும் வரையில் இவ் உலகில் எந்த கொடுமைகளும் ஓய போவதில்லை என்பது உறுதி.