சர்வதேச நன்கொடையாளர் மாநாடு பிற்போடப்படும் சாத்தியம்
நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் இருந்து மீளவதற்காக வரும் ஜனவரி மாதம் சர்வதேச நன்கொடையாளர் மாநாடொன்றை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
அது தொடர்பில் முதல் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தாமதமாவதால் சர்வதேச நன்கொடையாளர் மாநாடு தள்ளிப் போவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டுக்கு முன்னர், அரசாங்கம் மற்றும் இராஜதந்திர தூதரக பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு உதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாடுகளுடன் வேண்டிய உதவிகள் குறித்து விவாதித்து ஆரம்ப உடன்பாட்டை எட்டுவதே இராஜதந்திர பாரம்பரியமாகும்.
அதன் பின்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்
ஜனவரியில் மாநாடு நடத்தப்பட வேண்டுமானால், ஜனாதிபதி அல்லது அமைச்சரவையால் வெளியுறவு அமைச்சர் தலைமையில் நிதி அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை நியமித்திருக்க வேண்டும்.
மேலும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ஜனவரியில் நடைபெறவிருக்கும் நன்கொடையாளர் மாநாடு தொடர்பாக வெளியுறவு அமைச்சின் தற்போதைய ஆரம்பகட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டபோது,

நிதி அமைச்சினால் முக்கிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்தத் திட்டத்தின்படி தேவையான இராஜதந்திர ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இருப்பினும், மாநாடு தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ பணிகளையும் தனது அமைச்சு இன்னும் தொடங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.