சீனாவுக்கு குரங்குகளை வழங்கினால் அதற்கு மனித அன்பு கிடைக்கும்: விவசாய அமைச்சர்
சீன மிருகக்காட்சிசாலைக்கு குரங்குகளை வழங்கினால் அவை மனிதர்களின் அன்பு, ஆதரவுடன் வாழும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வனவிலங்குகள் பயிர்களைச் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கொழும்பில் டொலர்களை நம்பி ஏசி அறைகளில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்குப் புரியப்போவதில்லை.
சுற்றுச்சூழல் அமைப்புகள்
அத்துடன், குரங்குகளைச் சீன மிருகக்காட்சிசாலைக்கு வழங்குவது தொடர்பிலான வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
எனினும், மீண்டும் சீனாவின் தனியார் நிறுவனமொன்று குரங்குகளை பெற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ளது.
வனவிலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுப்பது தொடர்பில் சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினரிடமிருந்து விவசாய அமைச்சுக்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
துப்பாக்கிகளைக் கேட்கிறார்கள்...
அதில் சேலைகளைத் தொங்க விடுதல், விவசாய நிலத்தைச் சுற்றி தகரங்களைக் கட்டுதல், பயிர்நிலத்தின் அரை ஏக்கரை வனவிலங்குகளின் உணவுக்காக வழங்குதல் போன்ற பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர்.
சீன மிருகக்காட்சிசாலைக்கு குரங்குகளை வழங்கினால் அவை மனிதர்களின் அன்பு, ஆதரவுடன் வாழும்.
பயிர்நிலங்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் துப்பாக்கிகளைக் கேட்கிறார்கள். இவ்வாறு சென்றால் இறுதியில் என்ன நடக்கும் என இதன்போது அமைச்சர் மகிந்த அமரவீர கேள்வியெழுப்பினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |