ஐ.நாவில் நிறைவேறிய ட்ரம்பின் காசா தீர்மானம்.!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், காசாவுக்கான 20 அம்சத் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வாக்களித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் சர்வதேச நிலைப்படுத்தல் படையை நிறுவுவதும் அடங்கும். இதற்கு பல பெயர் குறிப்பிடப்படாத நாடுகள் பங்களிக்க முன்வந்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
இந்தத் தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சோமாலியா உட்பட 13 நாடுகள் ஆதரித்துள்ளன.
ஹமாஸின் குற்றச்சாட்டு
இந்த முன்மொழிவுக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. எனினும் ரஷ்யாவும் சீனாவும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், குறித்த தீர்மானம் பலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கூறி ஹமாஸ், அந்தத் தீர்மானத்தை நிராகரித்துள்ளது.
இந்தத் திட்டம், காசா பகுதியில் ஒரு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை திணிக்கிறது என்று ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
பொலிஸ் துறை
ட்ரம்பின் இந்த வரைவுத் தீர்மானத்தில், ஹமாஸ் உட்பட அரசு சாராத ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக நீக்குதல் மற்றும் பொதுமக்களையும் மனிதாபிமான உதவி வழிகளையும் பாதுகாப்பது என்ற அம்சங்களும் அடங்கியுள்ளன.

அத்துடன், ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் கீழ் ஹமாஸ், தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காசாவில் புதிதாக பயிற்சி பெற்ற பலஸ்தீன பொலிஸ் துறையை உருவாக்கவும் இந்த வரைவு அழைப்பு விடுக்கிறது. இதுவரை, அங்குள்ள பொலிஸ் துறை ஹமாஸின் அதிகாரத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |