2024இல் ஒரு டொலரின் பெறுமதி 400 ரூபாய் : எதிர்பார்ப்பு தொடர்பில் ரணிலின் அறிவிப்பு
2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (13) ஆரம்பமான சார்க் நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களின் “SAARCFINANCE” மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பணம் அச்சிட முடியாது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் 1949 ஆம் ஆண்டு பிறந்தேன். அப்போது நிலையான மாற்று விகிதம் 3 ரூபாய் 32 சதங்கள். 1978 இல், நான் அமைச்சரவையில் இருந்தபோது, நிலையான மாற்று விகிதத்தை நீக்கிவிட்டு, டொலருக்கு நிகரான 16 ரூபாய் என்ற மிதக்கும் மாற்று விகிதத்திற்கு மாற்றினோம்.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற விரிவான திட்டங்கள் இருந்தபோதிலும், அச்சிடுவதற்குப் பணம் தேவைப்பட்ட போதிலும், 2009 ஆம் ஆண்டளவில் நாம் டொலருக்கு 116 ரூபாவை செலுத்த வேண்டிய நிலையை எட்டியிருந்தோம்.
அப்போது சர்வதேச நாணய நிதியம் வெளிநாட்டுக் கடன் நெருக்கடிக்கு மிதமான ஆபத்து இருப்பதாக அறிவித்திருந்தது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், மகாவலி திட்டத்தின் ஊடாக அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தி, நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்தோம். எமது சுதந்திர வர்த்தக வலயங்கள், எங்களின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை உறுதி செய்தன.
எங்களிடம் வளமான சுற்றுலாத் துறை இருந்தது. 2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய்.
எனவே, 1949 – 2024 வரையிலானபொருளாதார வளர்ச்சியானது மத்திய வங்கிக் கொள்கையை விட பணத்தை பெரும்பாலும் அச்சிடுவதை மையப்படுத்தியதாகவே இருந்துள்ளது.
கடன் பெறும் தரப்பு என்ற வகையில் நாம் கடன் வாங்குதல், பணத்தை அச்சிடுதல் உள்ளிட்டச் செயற்பாடுகளையே முன்னெடுத்திருக்கிறோம். அதன்படி, நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே புதிய மத்திய வங்கி சட்டத்தினை சமர்பித்திருக்கிறோம்.
அதன்படி மத்திய வங்கியிடம் கடன் வாங்குவும், பணம் அச்சிடவும் முடியாது. அரச வங்கிகளிடத்திலிருந்தும் கடன் பெற முடியாது. அதனால் வருமான வழிமுறைகளை மேம்படுத்துவதற்காக தூண்டப்படுவோம். அதேபோன்று பணவீக்கம் தொடர்பிலான இலக்குகளும் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |