இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றம்
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (18.05.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை விட குறைந்துள்ளது.
இதன்படி, இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 300 ரூபா என்ற வரம்பிற்கு குறைவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக வங்கிகள்
மக்கள் வங்கியின் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 296.59 ரூபாவாகவும், விற்பனை விலை 313.52 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 296.92 ரூபாவாகவும், விற்பனை விலை 310 ரூபாவாகவும் காணப்படும் அதேவேளை சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையானது 300 ரூபாவாகவும், விற்பனை விலை 312 ரூபாவாகவும் பதிவு செய்யப்படுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18.05.2023) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலையானது 299.21 ரூபாவாகவும், விற்பனை விலை 312.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலையானது 302.42 ரூபாவாகவும், விற்பனை விலை 316.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மிகப்பெரும் இடைவெளிக்கு பின்னர் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைவாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையின் மத்திய வங்கியின் தரவுகளின்படி, இறுதியாக 2022 ஏப்ரல் 6ஆம் திகதி 300 ரூபாவை விட குறைவாக அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி பதிவாகிருந்ததாகவும், குறித்த திகதியில் டொலரின் கொள்வனவு பெறுமதி 298.10 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 308.49 ரூபாவாகவும் பதிவாகியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.