இரு வாரங்களில் மிக வேகமாக உயர்ந்த இலங்கை ரூபாவின் பெறுமதி! டொலரின் வீழ்ச்சியும் மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மையும்
நாட்டில் கடந்த வருடம் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி மிக வேகமாக அதிகரித்தது.
குறிப்பாக அதன் விற்பனை பெறுமதி 371 ரூபா என்ற இலக்கை அடைந்ததுடன், கொள்வனவு பெறுமதி அதனை அண்மித்த பெருமானங்களில் பதவாகியிருந்தது.
இதன்காரணமாக நாட்டின் பல துறைகளில் சிக்கல் நிலை ஏற்பட்டதுடன், விலைவாசி கடும் உயர்வை அடைந்திருந்தது.
இந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் டொலரின் பெறுமதி சரிய ஆரம்பித்து இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்தது.
சிறிய தொகையில் இருந்து வலுப்பெற ஆரம்பித்த இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்தது.
இதன்படி, அதற்கு முந்தைய டொலரின் விற்பனை பெறுமதியான 348.03 ரூபாவில் இருந்து மார்ச் மாதம் 7ஆம் திகதி டொலரின் விற்பனை பெறுமதி 335.75 ரூபாவாக பதிவானது.
அத்துடன், கொள்வனவு பெறுமதி 334.50 ரூபாவில் இருந்து 318.30 ரூபாவாக மார்ச் மாதம் 7ஆம் வீழ்ச்சியை பதிவு செய்து ரூபாவின் பெறுமதி உயர்ந்தது.
ஒரு வருடத்தின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்
அதன் பின்னரான நாட்களிலும் டொலரின் பெறுமதி கடும் வீழ்ச்சியை அடைந்ததுடன் மீண்டும் மார்ச் மாதம் 15ஆம் திகதி டொலரின் பெறுமதியானது உயர ஆரம்பித்தது. அன்றைய விற்பனை பெறுமதியாக 344.66 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், கொள்வனவு பெறுமதி 327.59 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து ரூபாவின் பெறுமதியில் உயர்வு மற்றும் வீழ்ச்சி என தளம்பல் நிலை காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது.
மேலும், கடந்த ஒரு வருடத்தின் பின்னர் டொலரின் கொள்முதல் பெறுமதியானது இம்மாதம் 18ஆம் திகதி 300 ரூபாவுக்கு கீழ் குறைந்து 299 ரூபா 21 சதமாக பதிவாகியிருந்தது.
அடுத்த நாளான 19ஆம் திகதி மாத்திரம் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டதுடன் அடுத்து வந்த இரு வாரங்களிலும் தொடர் வீழ்ச்சியையே டொலரின் பெறுமதி சந்தித்து வருகின்றது.
இதேவேளை, நேற்று முன்தினம்(26.05.2023)வரையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 19.8 வீதத்தால் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று முன்தினம், 295 ரூபா 62 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 308 ரூபா 54 சதமாகவும் காணப்பட்டது.
இதேநேரம், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 18.9 வீதத்தாலும், ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 17 வீதத்தாலும் வலுப்பெற்றுள்ளது.
இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 19.7 வீதத்தாலும்,
ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 26.4 வீதத்தாலும் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரூபாவின் பெறுமதி கடுமையான உயர்வை அடைந்து வரும் நிலையில் அதன் நன்மையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |