ஒரே இரவில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! அநுர அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட நிலை
நாங்கள் நாட்டைப் பொறுப்பேற்பதற்கு முன்பு அமெரிக்க டொலரொன்றின் ஒரே இரவில் பல மாற்றங்களுக்கு உள்ளாகும் நிலை இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கும் வருவதற்கு முதல், அமெரிக்க டொலரின் பெறுமதி உறங்கச் செல்லும் போது ஒரு பெறுமதியில் இருக்கும், காலையில் எழுந்து பார்க்கும் போது ஒரு பெறுமதியில் இருக்கும். நிலையற்ற ஒரு தன்மையே காணப்பட்டது.
ஆனால், தற்போது எங்களுடைய ஆட்சியில் டொலரின் பெறுமதியை 300 ரூபா என்ற மட்டத்திலேயே பேணி வருகின்றோம். பொருளாதாரம் ஸ்திரமடைந்து வருகின்றது.
அதேபோல வங்கிகளின் வட்டி வீதமும் மிகவும் வேகமாக அதிகரித்துச் சென்றது. அவற்றையும் தற்போது குறைந்தளவில் பேணி வருகின்றோம். இது பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கு ஒரு உதாரணமாகும்.
இதற்கு முன்னரான நாட்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எமது நாட்டை விட்டுச் சென்றனர். பல வேலைத்திட்டங்களை அவர்கள் கைவிட்டுச் சென்றனர். இவை அனைத்தையும் மீட்டுக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் இப்போது மேற்கொண்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.